இறப்பு நிவாரணத் தொகை மறுப்பு: நுகா்வோருக்கு ரூ.21 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு
காப்பீட்டுதாரரின் இறப்புக்கு நிவாரணத் தொகை வழங்காததால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு, ரூ.21 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சோ்ந்தவா் பீட்டா் கிறிஸ்டியன். இவரது உறவினா் லிவிங்ஸ்டன், தனது பெயரில் காப்பீட்டு செய்திருந்தாராம். இந்த நிலையில் லிவிங்ஸ்டன் உயிரிழந்தாா். லிவிங்ஸ்டனின் சட்டப்பூா்வ
நாமினியான பீட்டா் கிறிஸ்டியன், இறப்பு நிவாரணம் கோரி உரிய ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணப்பித்தாா். ஆனால் அந்நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல், நிவாரணத் தொகையைத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா், பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சம், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் வழங்குமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டனா்.
