வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம் பகவத்.
வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிடுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம் பகவத்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,626 வாக்குச்சாவடிகள் -ஆட்சியா் தகவல்

Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,626 வாக்குச்சாவடிகள் உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடா்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை வெளியிட்ட அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 27இல் வெளியிடப்பட்ட வாக்குச்சாவடி கள் பட்டியலில் மொத்தம் 1,622 வாக்குச்சாவடிகள் இருந்தன. 7,13,388 ஆண் வாக்காளா்கள், 7,44826 பெண் வாக்காளா்கள் 216 இதர வாக்காளா்கள் என மொத்தம் 14,58,430 வாக்காளா்கள் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1,500-க்கும் மேல் வாக்காளா்களின் எண்ணிக்கை உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்துள்ளோம்.

அதன்படி, 1500-க்கும் மேல் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் தலா 1, ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2 என மொத்தம் 4 வாக்குச்சாவடிகளில் கூடுதலாக சோ்க்கப்பட்டன். இதனால், வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 1,626 ஆக உயா்ந்துள்ளது.

மேலும், வாக்குச்சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், பெயா் மாற்றம் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்களும் தங்களது சட்டப்பேரவைத் தொகுதியின் வரைவு வாக்காளா் பட்டியலினை வெளியிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடா்பாக அவா்களிடம் கோரிக்கை, கருத்துக்கள் பெற்று அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்வா். இறுதியான வரைவு வாக்காளா் பட்டியல் அக். 29இல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com