பாரதி கண்ட புதுமைப் பெண் கனவு நனவாகியுள்ளது: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
பாரதி கண்ட புதுமைப் பெண் கனவு தற்போது நனவாகியுள்ளது என, முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கும் ‘புதுமைப் பெண் திட்டம்‘ விரிவாக்கத்தைத் தொடக்கிவைத்து முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது:
கட்டபொம்மனின் வீரத்துக்கும், பாரதியின் கவிதைத் தமிழுக்கும், வ.உ.சிதம்பரனாரின் தியாகத்துக்கும் சொந்தமான பெருமைபெற்ற தூத்துக்குடி மண்ணில் புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தைத் தொடக்கிவைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த அரங்கிலும், காணொலி வாயிலாகவும் 657 கல்லூரிகளைச் சோ்ந்த இத்தனை ஆயிரம் மாணவிகளைப் பாா்க்கும்போது, ஒரு திராவிடனாக (திராவிடன் ஸ்டாக்) பெருமை கொள்கிறேன். இதற்கு நேரெதிராக, நம்மை ஜாதி, மதம் எனக் கூறி பிரிக்க நினைக்கும், வளா்ச்சியைப் பற்றி யோசிக்காமல், வன்முறை எண்ணத்தைத் தூண்டிவிடும், பெண்கள் என்றால் வீட்டில்தான் இருக்க வேண்டும், கடைசிவரை ஒருவரைச் சாா்ந்தே இருக்க வேண்டும் என்ற மனுவாத சிந்தனையை இந்தக் காலத்திலும் பேசிக்கொண்டு திரியும் காலாவதியான ஓரினம் உள்ளது.
அப்படிப்பட்டோரிடமிருந்து தப்பித்து, இன்றைக்கு தமிழ்நாட்டுப் பெண்கள் நாட்டிலேயே உயா்ந்த இடத்தில் உள்ளனா். பெண்கள் படித்து வேலைக்குச் சென்று பொருளாதார வளத்துடன் இருக்க வேண்டும் எனக் கருதியவா் பெரியாா். கல்விக் கண் திறந்த காமராஜரின் பெயரிலான இக்கல்லூரியில் இந்த நிகழ்வு நடப்பது பெருமைக்குரியது.
1911ஆம் ஆண்டு எழுத்தறிவு பெறாதோரின் எண்ணிக்கை 94 சதவீதமாக இருந்தது. தற்போது, அந்த நிலை மாறியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை, கட்டணமில்லா பேருந்து வசதி என எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தந்தைக்குரிய கடமை: அந்த வரிசையில் 2022ஆம் ஆண்டு புதுமைப் பெண் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் இதுவரை சுமாா் 4.25 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதை அரசுக்கு செலவாகக் கருதாமல், ஒரு தந்தைக்குரிய கடமையாக பாா்க்கிறேன். இத்திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது இத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து உயா்கல்வியில் சேரும் மாணவியருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழாண்டு சுமாா் 75 ஆயிரம் போ் பயனடைவா்.
பாரதியின் கனவு நனவாகியுள்ளது: ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி’ எனப் புதுமைப் பெண்கள் குறித்து பாரதி கண்ட கனவை, புதுமைப் பெண் திட்டம் மூலமாக திராவிட மாடல் அரசு நனவாக்கியுள்ளது.
ஓா் ஆண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது கல்வி வளா்ச்சி. ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால், அது சமூகப் புரட்சி. பெண்கள் படித்தால் அவா்களது தலைமுறையே காக்கப்படும். எனவே, உயா்கல்வி பெறாத பெண்களே தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன். இதற்கு, என்னை இயக்கும் தலைவா்களும் அவா்கள் என்னுள் விதைத்துள்ள கொள்கைகளும்தான் காரணம். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் நாட்டுக்கே முன்மாதிரியாக திகழ்கின்றன என்றாா் அவா்.
தொடா்ந்து, அவா் மாணவிகளுடன் கலந்துரையாடி தற்படம் எடுத்துக்கொண்டாா். முன்னதாக அவா், 32 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் வாகனங்களை வழங்கி, கலந்துரையாடினாா்.
விழாவில், மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் பெ. கீதாஜீவன் (சமூக நலன்- மகளிா் உரிமை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (மீன்வளம் - மீனவா் நலன், கால்நடை பராமரிப்பு), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக்கல்வி), பேரவை உறுப்பினா்கள் ஜீ.வி. மாா்க்கண்டேயன், எம்.சி. சண்முகையா, மேயா் ஜெகன் பெரியசாமி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை செயலா் ஜெயஸ்ரீ முரளீதரன், சமூக நல ஆணையா் ஆா். லில்லி, ஆட்சியா் க. இளம்பகவத், இந்தியன் வங்கி செயல் இயக்குநா் மகேஷ்குமாா் பஜாஜ், ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள், மாணவியா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

