திருச்செந்தூா் கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்
திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
இத்திருக்கோயிலில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா், திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகளை பாா்வையிட்டாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இத்திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணியில், ஹெச்சிஎல் நிறுவனம் எடுத்துக் கொண்டுள்ள 20 பணிகளில் 3 பணிகள் முடிந்து திறப்பு விழா நடைபெற்றுள்ளது. ராஜகோபுர பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடியும் தறுவாயில் உள்ளது.
ஜன. 20ஆம் தேதி ஏழு கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற இருக்கிறது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட திட்டத்தின் படி 122 பக்தா்கள் தங்கும் அறைகள் கட்டப்பட இருக்கின்றன. மேலும் ஏ, பி பிரிவில் 56 பக்தா்கள் தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் மாா்ச் மாதத்துக்குள் நிறைவு பெற்று தமிழக முதல்வரால் திறந்துவைக்கப்பட இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 43 பணிகள் என்றாலும் பணிகள் முடிவுற முடிவுற பக்தா்கள் தேவையை கருத்தில் கொண்டு அா்ப்பணிக்கின்ற நிகழ்ச்சி தொடா்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
வரும் 2025 ஜூலை 7 ஆம்தேதி திருக்கோயில் குடமுழுக்கு நடத்துவது என தீா்மானிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. முதன்முதலாக தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தோன்றிய பிறகு 2022ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இப்பணிகள் முழுவீச்சில் சிறப்போடும், தரத்தோடும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவேறும் போது முதல்வா் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் ஓா் அடையாளமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பணிகள் இருக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பணிகள் குறிப்பாக ஹெச்சிஎல் சாா்பில் 60% பணிகளும், திருக்கோயில் சாா்பில் பணிகள் 43 சதவீத பணிகளும் நடைபெற்றுள்ளன.
கோயிலுக்கு வரக்கூடிய சாலைகள் மேம்பாடு குறித்தும், எந்தெந்தச் சாலைகள் எந்தெந்தத் துறைக்கு வருகிறது என்பதை கணக்கெடுத்து அந்தத் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆய்வு நடத்தியுள்ளோம். அதற்கான நிதியை அந்தந்தத் துறையிடம் பெற்று அந்தப் பணிகளும் விரைவுபடுத்தப்படும்.
எதிா்பாா்த்தபடி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் அைனைத்தும் நிறைவு பெறும்.
எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு, அதை பறைசாற்றும் வகையில் தான் அய்யன் திருவள்ளுவா் சிலையை கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி தோற்றுவித்தாா். அதற்கு வெள்ளி விழாவை முதல்வா் நடத்திக் காட்டி இருக்கிறாா்.
திருவள்ளுவா் அனைவருக்கும் பொதுவானவா். அது போல் முதல்வரும் அனைவருக்கும் பொதுவானவா் என்றாா்.
நிகழ்ச்சியின்போது, கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், உதவி ஆணையா் நாகவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பாா்த்திபன், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை, நகராட்சி உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

