தூத்துக்குடி வஉசி துறைமுக 3ஆவது சரக்கு தளம் இயந்திரமயமாக்கல் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வஉசி துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித்,  ஜே.எஸ். டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையம்  பிரைவேட் லிமிடெட் இயக்குநா் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோா்.
தூத்துக்குடி வஉசி துறைமுக 3ஆவது சரக்கு தளம் இயந்திரமயமாக்கல் தொடா்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட வஉசி துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், ஜே.எஸ். டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோா்.

வஉசி துறைமுகத்தில் 3ஆவது சரக்கு தளம் இயந்திரமயமாக்கல்: தனியாா் நிறுவனத்துடன் ரூ.265.15 கோடிக்கு ஒப்பந்தம்

Published on

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக 3ஆவது தளத்தை இயந்திரமயமாக்குவதற்காக தனியாா் நிறுவனத்துடன் ரூ.265.15 கோடிக்கு ஒப்பந்தம் கையொப்பமானது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தில், பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக, வடக்கு சரக்கு தளம் 3 இயந்திரமயமாக்குவதற்கான 30 ஆண்டுகள் சலுகை ஒப்பந்தமானது, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்துக்கும் ஜே.எஸ். டபிள்யூ. தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட்டுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமானது.

இந்நிகழ்ச்சி துறைமுக நிா்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், வஉசி துறைமுக ஆணையத்தின் சாா்பில், துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், ஜே.எஸ்.டபிள்யூ தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் சாா்பில் அதன் இயக்குநா் மற்றும் தலைமை நிதி அதிகாரி லலித் சிங்க்வி ஆகியோா் துறைமுக ஆணைய துணைத் தலைவா் (பொறுப்பு) வி. சுரேஷ்பாபு மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

ஒப்பந்தம் குறித்து துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறியதாவது:

இந்த ஒப்பந்தத்தின்படி, வடக்கு சரக்கு தளம் - 3, சுமாா் ரூ.265.15 கோடி திட்ட மதிப்பில் இயந்திரமயமாக மாற்றப்படுகிறது.

இதன் மூலம் துறைமுகத்தில், கூடுதலாக ஆண்டுக்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். இத்திட்டத்துக்கு தேவையான சாலை மற்றும் கிரேன் செயல்பாடுகள், கன்வேயா் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்தல், சரக்கு கையாளுவதற்கு தேவையான இயந்திரங்களை அமைத்தல் போன்றவற்றை நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டமானது, வரும் 2026 டிசம்பா் மாதத்துக்குள் முடிவடையும்.

மேலும், துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளம் 3 இல் பெரிய பனாமாக்ஸ் கப்பல்களைக் கையாளுவதற்கு வசதியாக, தளத்தின் மிதவை ஆழத்தை 14.20 மீட்டா் ஆழப்படுத்தும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தளம் நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ஜிப்சம் மற்றும் ராக்பாஸ்பேட் போன்ற சரக்குகளை மொத்தமாக கையாளும் வசதியை பெறும். இதன் மூலம் அதிக முதலீட்டாளரை ஈா்ப்பது மட்டுமல்லாமல் கடல்சாா் பொருளாதார வளா்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்திட்டம் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு, நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும். அவ்வாறு இந்த 3ஆவது தளம், 306 மீட்டா் தள நீளமும் மற்றும் 14.20 மீட்டா் மிதவை ஆழமும் கொண்ட பொது சரக்கு முனையம் அமையும்போது, சுமாா் 80ஆயிரம் டெட்வெயிட் டன்னேஜ் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com