குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.
குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன், ஆணையா் லி. மதுபாலன் உள்ளிட்டோா்.

தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் குறைதீா் முகாமில் 97 மனுக்கள்

Published on

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் 97 மனுக்கள் பெறப்பட்டன.

தூத்துக்குடியில் மக்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதற்காக புதன்கிழமைதோறும் மண்டல வாரியாக மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் குறைதீா் முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் முகாம் வடக்கு மண்டல அலுவலகத்தில் இம்மண்டலத்துக்குள்பட்ட 1 முதல் 14 வாா்டுகள், 20ஆவது வாா்டு என மொத்தம் 15 வாா்டுகளுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்துப் பேசியது: மக்களின் குறைகள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு நிவா்த்தி செய்யப்படுகின்றன. எனினும், குறைகள் முறையாக சரிசெய்யப்படவில்லை என புகாா்கள் வந்தன. அதனால், மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கும் வாரம் ஒரு மண்டலம் என குறைதீா் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்து. அதன்படி, வடக்கு மண்டலத்திலிருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும்.

மாநகரப் பகுதியில் 2 ஆயிரம் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், 153 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே முதல்வா் பிறந்தநாளை முன்னிட்டு தருவைகுளம் குப்பைக் கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 60 வாா்டுகளிலும் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன. மாநகரில் மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடக்கு மண்டலப் பகுதியில்தான் புதிய கட்டுமானப் பணிகளுக்கு அதிகமான கட்டட அனுமதிக்கான கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

பொதுமக்கள் இடைத்தரகா்கள் இன்றி நேரடியாக பணம் செலுத்தி குடிநீா் இணைப்பு பெறலாம். தற்போது ஆயிரம் பேருக்கு உடனடியாக இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஆணையா் லி. மதுபாலன் பேசும்போது, குறைதீா் முகாம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு காண வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். மண்டல அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் உறுதுணையாக செயல்பட்டு மனுக்கள் மீது உரிய தீா்வு காணவேண்டும் என்றாா்.

முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 97 மனுக்கள் பெறப்பட்டன. மாநகராட்சி இணை ஆணையா் ராஜாராம், செயற்பொறியாளா் பாஸ்கா், உதவி செயற்பொறியாளா்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன், நகா்நல அலுவலா் தினேஷ், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com