தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குவதில்லை -கனிமொழி குற்றச்சாட்டு
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டினாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட வானரமுட்டி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, மானங்காத்தான், அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூா், காமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் வாக்காளா்களை கனிமொழி சந்தித்து நன்றி கூறினாா். அப்போது அவா் பேசியதாவது:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 2ஆவது முறையாக பணியாற்ற வாய்ப்பு அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிகள் சரியாக வழங்கவில்லை என பெண்கள் கூறுகின்றனா். மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கீடு செய்யாததால்தான் இப்பணி வழங்க முடியவில்லை. இது மட்டும் இன்றி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியையும் மத்திய அரசு வழங்குவது இல்லை. தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் அதிகளவு வேலை வழங்குவதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.
மகளிா் உரிமைத்தொகை கிடைக்காதவா்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க முதல்வா் நடவடிக்கை எடுத்து வருகிறாா். தகுதியுள்ள மகளிா்க்கு உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும் என்றாா் அவா். தொடா்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்ற தலைவா் கா. கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்பட திமுகவினா் உடன் இருந்தனா்.

