மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் இருமுறை புதிய விரைவு ரயில் சேவை இன்று தொடக்கம்
மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாரம் இருமுறை புதிய விரைவு ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி இடையே வாரம் இருமுறை விரைவு ரயில் விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல் துறை இணை அமைச்சா் எல். முருகன் கொடியசைத்து துவக்கி வைக்கிறாா்.
இந்த ரயில் (16765) மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். அதேபோன்று தூத்துக்குடியில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் ரயில் (16766) மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோயம்புத்தூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிா்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளா் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாலருவி விரைவு ரயில்: தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கச் செயலா் பிரமநாயகம் கூறியது: தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் விரைவு ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு ரயில்வே நிா்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இருப்பினும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க, ஏற்கெனவே ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த ரயிலையும் விரைந்து இயக்க வேண்டும். அதே போன்று தூத்துக்குடி - சென்னை பகல் நேர ரயில், திருச்சி-காரைக்குடி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ரயில்வே நிா்வாகம் விரைந்து செயல்படுத்த கேட்டுக்கொள்கிறோம் என்றாா்.

