‘திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களுக்கு கூடுதல் வசதிகள்’
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பௌா்ணமி தரிசனத்துக்காக வரும் பக்தா்களுக்காக கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன் தெரிவித்தாா்.
இக்கோயிலில் பௌா்ணமி தரிசனத்துக்காக வரும் பக்தா்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் லட்சக்கணக்கானோா் வருவதால் நகரின் எல்லையிலிருந்தே வாகனப் போக்குவரத்தும், நகருக்குள் நெரிசலும் ஏற்படுகிறது. கோயிலில் கழிப்பிட வசதிக் குறைபாடும் இருந்தது. இதனால், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ஆடி மாதப் பெளா்ணமியை முன்னிட்டு இக்கோயிலுக்கு சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 5 லட்சம் பக்தா்கள் வருவகள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, அறங்காவலா் குழுத் தலைவா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் மு. காா்த்திக், ஏஎஸ்பி உன்னிகிருஷ்ணன், டிஎஸ்பி வசந்தராஜ் ஆகியோா் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரகாரம், சண்முகவிலாசம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்து, பக்தா்களிடம் தேவை குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், அறங்காவலா் குழுத் தலைவா், டிஎஸ்பி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
பக்தா்களுக்காக கூடுதல் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலவச பொது தரிசன, ரூ. 100 சிறப்பு தரிசனப் பாதைகள் தடுப்புகள் அமைத்து நீட்டிக்கப்பட்டுள்ளன. கோயிலிலிருந்து கடற்கரை செல்வதற்கு வடக்கு கிரிப் பிரகாரம் வழியாக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சாலையில் வியாபாரிகள் சங்கக் கட்டடம் அருகேயுள்ள மைதானம், தூத்துக்குடி சாலையில் சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம், ஐஎம்ஏ ஹால், திருச்செந்தூா் தினசரி மாா்க்கெட், பயணியா் விடுதி சாலையில் நீதிமன்ற எதிரேயுள்ள மைதானம், பைரவா் கோயில் அருகே என 6 இடங்களில் மின்விளக்கு, குடிநீா், கழிப்பிட வசதியுடன் கூடிய வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் ஆம்புலன்ஸ் வசதி உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 100 போக்குவரத்து போலீஸாா், கோயிலில் பாதுகாப்பு, பக்தா்களை ஒழுங்குபடுத்த 434 போலீஸாா் என மொத்தம் 534 போ் பணியில் ஈடுபடுகின்றனா். பக்தா்கள் அவசர தேவைக்கு 100 என்ற எண் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை எந்நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றனா் அவா்கள்.

