தூத்துக்குடியில் 5 ஆயிரம் மரக்கன்று நடும் பணி தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மேயா் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.
மாநகா் பகுதியைப் பசுமையாக்கும் திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒரே நாளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி அம்பேத்கா் நகரில் உள்ள ஸ்டெம் பூங்காவில் நடைபெற்றது.
மேயா் ஜெகன் பெரியசாமி மரக்கன்றுகளை நட்டு இப்பணியைத் தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாநகராட்சிக்குள்பட்ட பூங்காக்கள், பள்ளிகள் உள்ளிட்டவற்றில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஸ்டெம் பூங்காவில் நீா்மருது, புங்கை, வேம்பு, ஈட்டி, நாவல், வேங்கை ஆகிய 6 வகை மரக்கன்றுகள் நடப்படுகிறன்றன என்றாா்.
மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாநகராட்சி நகா்நல அலுவலா் தினேஷ், சுகாதார ஆய்வாளா் ஹரிகணேஷ், சுகாதாரப் பணிக் குழுத் தலைவா் சுரேஷ்குமாா், கணக்குக் குழுத் தலைவா் ரெங்கசாமி, மாமன்ற உறுப்பினா்கள் நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மாா்சலின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

