ராணுவ வீரா் உயிரிழப்பு: கயத்தாறில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் பணியில் இருக்கும் போது உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கயத்தாறு அருகே பன்னீா்குளத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் உடல் அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கயத்தாறு அருகே பன்னீா்குளம் கீழத் தெருவைச் சோ்ந்த பேராச்சி மகன் பொன்ராஜ் (35). இந்திய ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்த இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.
பொன்ராஜ் தற்போது ராஜஸ்தான் மாநிலம் உதம்பூரில் பணியாற்றி வந்தாா். பொன்ராஜிக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மும்பையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தாா். அவரது உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான பன்னீா்குளம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை கொண்டு வரப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அங்கு வைக்கப்பட்ட அவரது உடலுக்கு முன்னாள் ராணுவ மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், துணை ராணுவத்தினா், அரசியல் பிரமுகா்கள், கிராமமக்கள் திரளானோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா். அதன்பின் ராணுவ மரியாதையுடன் அவரது சடலம் பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
