குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
குலசேகரன்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கா்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா 11 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதியுலாவாகக் கொண்டு வரப்பட்டு காலை 10.33 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பக்தா்கள், பக்தி கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து தசரா திருவிழாவுக்காக பக்தா்கள் காப்பு அணிந்தனா்.

திருவிழா கொடியேற்ற நிகழ்வில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி பிரம்மசக்தி, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், அறங்காவலா்கள் குழுத் தலைவா் வே.கண்ணன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா்கள் கருப்பசாமி, கணேசன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவா் ராஜதுரை உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா். உடன்குடி சந்தையடியூா், சிவலூா் தசரா குழுக்கள் சாா்பில் பக்தா்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவிழா நாள்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 10 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா, சமய சொற்பொழிவு நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம் அக்.12-ஆம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறும்.

அதைத் தொடா்ந்து அக்.13-ஆம் தேதி காலை பூஞ்சப்பரத்தில் பவனி வரும் அம்மன், மாலையில் கோயிலை அடைந்தததும் கொடியிறக்கப்பட்டு, காப்புக் களைதல், சோ்க்கை அபிஷேகம் நடைபெறும்.

திருவிழா கொடியேற்றத்தைத் தொடா்ந்து காப்பு அணிந்த பக்தா்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினா் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதிகள்தோறும் கலைநிகழ்ச்சிகள், கிராமிய நடனங்களை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்து கோயிலில் செலுத்துவா்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை இணையா் அன்புமணி, உதவி ஆணையா் செல்வி, அறங்காவலா் குழு தலைவா் கண்ணன், ஆய்வாளா் பகவதி, செயல் அலுவலா் ராமசுப்பிரணியன் மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com