குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம், சனிக்கிழமை (அக். 12) இரவு நடைபெறுகிறது.
இக்கோயிலில் தசரா பெருந்திருவிழா, அக். 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து காப்பு அணிந்த பக்தா்கள் பல்வேறு வேடங்கள் அணிந்தும், தசரா குழுவினா் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனா்.
கோயிலில் தினமும் காலைமுதல் இரவு வரை அம்மன், சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் இரவில் அம்மன் பல்வேறு திருக்கோலங்களில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.
விழாவின் சிகர நிகழ்வான மகிஷாசுரசம்ஹாரம் சனிக்கிழமை (அக். 12) இரவு 12 மணிக்கு கடற்கரையில் நடைபெறுகிறது. இதனையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் குலசேகரன்பட்டினம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனா்.
அக். 13 ஆம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வரும் அம்மன், மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். பின்னா், பக்தா்கள் காப்பு அவிழ்த்து தங்கள் வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்வாா்கள்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள் குழு தலைவா் வே.கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் செல்வி, செயல் அலுவலா் இராமசுப்பிரமணியன், ஆய்வாளா் பகவதி மற்றும் அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

