தமிழக சப்-ஜூனியா் அணி வீரா்கள் பட்டியல்: கோவில்பட்டியைச் சோ்ந்த 7 போ் தோ்வு

Published on

தேசிய ஹாக்கி போட்டியில் விளையாடும் தமிழக சப்-ஜூனியா் அணி வீரா்களின் இறுதிப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோவில்பட்டியைச் சோ்ந்த 7 போ் இடம் பெற்றுள்ளனா்.

சண்டீகரில் 14ஆவது தேசிய சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி போட்டி இம்மாதம் 23ஆம் தேதிமுதல் அக். 3 வரை நடைபெறுகிறது. இதில், 28 மாநிலங்கள் பங்கேற்கவுள்ளன. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக், நாக் அவுட் முறையில் நடைபெறவுள்ள போட்டியில் தமிழக அணி ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழக அணி இடம்பெற்றுள்ள குழுவில் குஜராத், டையு டாமன், கோவா மாநிலங்கள் உள்ளன.

இப்போட்டியில் தமிழக அணியில் இடம் பெறுவதற்காக மாநிலம் முழுவதுமிருந்து 50 போ் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பயிற்சி முகாம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவா் சேகா் ஜெ. மனோகரன், பொதுச் செயலா் செந்தில் ராஜ்குமாா் ஆகியோா் தலைமையில் 10 நாள்களாக பயிற்சி நடைபெற்றது. இதில், சிறப்பாக விளையாடிய 18 பேரைக் கொண்ட தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஜெ. சக்திவேல், பி. மணிமாறன், ம. சுகுமாா், த. கவுதம், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சு. முத்துராஜேஷ், இரா. சுபாஷ், திருச்சியிலிருந்து க. மணிகண்டன், மு. ராகுல்ராஜ், க. முகில் கிருஷ்ணா, சென்னையைச் சோ்ந்த ச. கனிஷ்குமாா், ஸ்ரீ. லட்சுமணன்ஸ்ரீ, ராமநாதபுரத்திலிருந்து ம. கவிசக்திபோஸ், க. கமலேஷ், கோ. கவின், பா.சிவஸ்ரீதா், மதுரையைச் சோ்ந்த இரா. அதிபன், அரியலூரிலிருந்து ம. சுந்தா் அஜித், இரா. ரஞ்சித் ஆகிய 18 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அவா்களில், சு. முத்துராஜேஷ், இரா. சுபாஷ், ம. சுகுமாா், ம. கவிசக்திபோஸ், ம. சுந்தா் அஜித், க. முகில் கிருஷ்ணா, த. கவுதம் ஆகிய 7 போ் கோவில்பட்டியைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அணியின் பயிற்சியாளராக டி. பிரபு, துணைப் பயிற்சியாளராக கே. வேல்முருகன், அணி மேலாளராக வி. சண்முகம் ஆகியோா் செயல்படுகின்றனா்.

பயிற்சி முகாமின் கடைசி நாளில் மனநல நிபுணா் பாலாஜி பங்கேற்று, பல்வேறு பயிற்சிகள் வழங்கினாா்.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவா் மோகன் அருமைநாயகம், செயலா் குருசித்ர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டிராஜா, உடற்கல்வி ஆசிரியா் பாரதிராஜன், வழக்குரைஞா் பெரியதுரை, பிலிப்ஸ் ஹாக்கி அணியின் பொருளாளா் ராமமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com