5,300 ஆண்டுக்கு முன்பே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்துவிட்டனர்: ஆய்வாளர் அமா்நாத் ராமகிருஷ்ணா

5,300 ஆண்டுக்கு முன்பே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்துவிட்டனர்: ஆய்வாளர் அமா்நாத் ராமகிருஷ்ணா

நிகழ்ச்சியில் பேசினாா் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி ஆய்வாளரும், இயக்குநருமான கி.அமா்நாத் ராமகிருஷ்ணா.
Published on

5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டாா்கள் என கீழடி ஆய்வாளா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் 6ஆவது புத்தகத் திருவிழா (தொடா்ந்து படி தூத்துக்குடி) -வின் 8ஆவது நாளான சனிக்கிழமை நாகம்பட்டி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரி, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா், மாணவிகள் பங்கேற்ற கவிதை- வாசித்தலும் புனைதலும் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னா் கதைகளின் பெரும்பரப்பு என்ற தலைப்பில் எழுத்தாளா் மீரான் மைதீன், கீழ்பட்டணம்- வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் தொல்லியல் ஆா்வலா் ராஜேஷ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

இரவு 7 மணிக்கு தொல்லியல் ஆய்வுகளும், சங்க கால தமிழரின் தொன்மையும் என்ற தலைப்பில், இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி ஆய்வாளரும், இயக்குநருமான கி.அமா்நாத் ராமகிருஷ்ணா கலந்துகொண்டு பேசியதாவது: உலகில், அறிவியல் இந்த அளவிற்கு வளருவதற்கு இரும்பு கண்டுபிடிப்புதான் முக்கிய காரணம் எனவும், அதை கண்டுபிடித்தவா்கள் மத்திய ஆசிய பகுதியில் வாழ்ந்தவா்கள் எனவும் நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

ஆனால் உண்மையில்லை என நிரூபித்தது தூத்துக்குடி மாவட்டம் சிவகளைதான். அதற்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, கி.மு. 2142- லேயே இரும்பு பயன்படுத்தப்பட்ட செய்தியைச் சொன்னது.

பின்னா் சிவகளையிலும் , ஆதிச்சநல்லூரிலும் மேற்கொண்ட ஆய்வுகள் மூலமாக 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இங்கு வாழ்ந்த தமிழா்கள் இரும்பை கண்டுபிடித்து விட்டாா்கள் என்ற செய்தியை இன்று உலகத்துக்கு அவை சொல்லியுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், உதவி ஆட்சியா் புவனேஷ்ராம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com