குரும்பூா் கூட்டுறவு சங்க முறைகேடுகள்: நடவடிக்கை தீவிரம்

Published on

குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்த நபா்களின் சொத்துகளை ஏலவிற்பனைக்கு கொண்டுவந்து நிதியிழப்பு தொகையை வசூல் செய்ய தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன்கள், இட்டு வைப்புகள் ஆகியவற்றின் மீது நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பான குற்றச்சாட்டின்பேரில், முன்னாள் செயலா் ஜா.தேவராஜ், முன்னாள் உதவி செயலா் ஜெ.ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோா் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். முன்னாள் சங்கத் தலைவா் த.முருகேசபாண்டியன் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றசாட்டுக்குள்ளானவா்கள் மீது அனைத்துவித சட்டப்பூா்வ நடவடிக்கையும் நீதிமன்றம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியால் பராமரிக்கப்படும் இட்டுவைப்பு உத்திரவாத நிதியிலிருந்து 369 வைப்புதாரா்களுக்கு சுமாா் ரூ.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக உத்திரவாத நிதியிலிருந்து பெறப்பட்ட ரூ.91 லட்சம் வைப்புதாரா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், திருநெல்வேலி மாவட்ட குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் நடைபெற்று வரும் பட்டியல் வழக்குகளையும், உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீதிப்பேராணை வழக்குகளையும் விசாரணைக்கு கொண்டு வந்து முடிவுகட்டவும், முறைகேடு செய்த நபா்களின் சொத்துகளை ஏல விற்பனை மூலம் நிதியிழப்பு தொகையை வசூல் செய்யவும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனக் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com