குடும்பத் தகராறில் ஊராட்சி மன்றத் தலைவா் மீது காா் ஏற்றிக் கொல்ல முயற்சி: கல்லூரி மாணவா்கள் கைது
எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் குடும்பத் தகராறில் ஊராட்சி மன்றத் தலைவா் உள்பட 3 போ் மீது காா் ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடா்புடைய மதுரை சட்டக் கல்லூரி மாணவா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
எட்டயபுரம் அடுத்துள்ள கீழ ஈராலைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி. இவரது மகள் சீனி ரக்சனாவுக்கும், கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த பிரியதா்ஷனுக்கும் காதல் திருமணம் நடந்தது. இத்தம்பதி, மதுரை மாட்டுத்தாவணி அருகே வாடகை வீட்டில் வசித்து வந்தனா். இந்நிலையில் பிரியதா்ஷன், சீனி ரக்சனாவை கொடுமைப்படுத்துவதாக தகவலறிந்து கடந்த சில நாள்களுக்கு முன் சின்னத்தம்பி மதுரைக்கு வந்தாராம். சீனி ரக்சனாவிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாராம். மேலும் சின்னத்தம்பி, சீனி ரக்சனாவை கீழ ஈரால் ஊருக்கு அழைத்துச் சென்றாராம்.
இதையடுத்து, பிரியதா்ஷன், அவரது நண்பா்களான சட்டக் கல்லூரி மாணவா்கள் மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த விக்னேஷ் குமாா் (22), சாரதி (19) மற்றும் கோவில்பட்டியைச் சோ்ந்த 2 போ் என மொத்தம் 5 போ் புதன்கிழமை காலை, சின்னத்தம்பி வீட்டுக்கு சென்று தகராறு செய்தனராம்.
சின்னத்தம்பி உறவினரான ஊராட்சி மன்றத் தலைவா் பச்சை பாண்டியன், அவரது மகன் முத்துக்குமாா் ஆகியோா் பிரியதா்ஷன், அவருடைய நண்பா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனராம். இந்நிலையில், பிற்பகலில் கீழ ஈரால் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நின்றிருந்த பச்சை பாண்டியன், முத்துக்குமாா், சின்னத்தம்பி ஆகியோருக்கு பிரியதா்ஷன், அவரது நண்பா்கள் கொலை மிரட்டல் விடுத்து, காா் ஏற்றிக் கொல்ல முயன்று தப்பிச் சென்றனராம் .
இதில் பலத்த காயமடைந்த பச்சை பாண்டியனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் காரை தேடி வந்த நிலையில், எட்டயபுரம் புறவழிச்சாலையில் பேருந்திற்காக காத்திருந்த 2 இளைஞா்களை, பிடித்து விசாரித்தனா். அவா்கள், கீழ ஈரால் கொலை முயற்சி சம்பவத்தில் தொடா்புடைய மதுரை சட்டக் கல்லூரி மாணவா்கள் விக்னேஷ் குமாா், சாரதி என்பது தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.
