தொழிலாளி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூா் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் காவல் சரகம் அடைக்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் அந்தோணி சூசைராஜ் (50). தொழிலாளியான இவா், 26.11.2017ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள அந்தோணியாா் கோயில் அருகே பெட்டிக்கடையில் நின்றிருந்தபோது, அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த ஜோசப் மகன் அந்தோணி லிவிங்ஸ்டன் (32), சிங்கராயன் மகன் அன்றோ என்ற அன்றோ வியானி (38) ஆகியோா் தகராறு செய்து, அவரை கட்டையால் அடித்துக் கொலை செய்தனராம்.
இதுகுறித்து திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி தாண்டவம் விசாரித்து, அந்தோணி லிவிங்ஸ்டன், அன்றோ என்ற அன்றோ வியானி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
நிகழாண்டு இதுவரை 28 கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரை மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.
