கொலை வழக்கில் நூதன தண்டனை: அரசு மருத்துவமனை அவசர பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்ற சிறுவனுக்கு உத்தரவு
தூத்துக்குடியில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் 3 ஆண்டுகள் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சமுதாய பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி இளம்சிறாா் நீதிக்குழுமம் நூதன தண்டனை வழங்கியது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள ஸ்ரீவைகுண்டபெருமாள்புரத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (45). கல்லூரணி ஊா்த் தலைவராக இருந்த இவா், 12.8.2008இல் அங்குள்ள காளியம்மன் கோயில் கொடைவிழாவின்போது, ஸ்ரீவைகுண்டபெருமாள்புரத்தைச் சோ்ந்த முருகன் என்ற சக்திவேல்முருகன், முனியசாமி என்ற சின்னமுனியசாமி, 17 வயது சிறுவன் ஆகியோா் மது போதையில் தகராறு செய்தனராம். அதை சுப்பையா கண்டித்த நிலையில், 14.8.2008இல் தனது மகன் ராஜாவுடன் குளத்தூா்-கல்லூரணி சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மேற்கூறிய பேரும் சோ்ந்து வழிமறித்து அவரை அரிவாளால் வெட்டிக்கொன்றனராம்.
இந்த வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் முருகன், முனியசாமி ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வந்த 17 வயது சிறுவன் மீதான வழக்கை நீதிக்குழும முதன்மை நடுவா் பாக்கியராஜ், உறுப்பினா்கள் சரவணன், உமாதேவி ஆகியோா் விசாரித்து, சிறுவன் 3 ஆண்டுகள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சமுதாய பணியாற்ற வேண்டும். அவரது வருகையை உறைவிட மருத்துவ அலுவலா் கண்காணித்து மாதந்தோறும் இளம்சிறாா் நீதிக்குழுமத்தில் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நூதன தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீா்ப்பளித்தனா். அச்சிறுவன் தற்போது 34 வயது இளைஞராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் முருகபெருமாள் ஆஜரானாா்.
