திருச்செந்தூா் தெப்பக்குளம் மண்டபத்தில் தீ விபத்து
மின் கசிவால் திருச்செந்தூா் தெப்பக்குளம் மண்டபத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்புத் துறையினா் அணைத்தனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், நாகா்கோவில் சாலையில் ஆவுடையாா்குளம் அருகில் உள்ளது. தற்போது, தொடா் மழை மற்றும் நீா் வரத்தால் தெப்பக்குளம் நிரம்பியுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் மண்டபத்தில் மின்கசிவு ஏற்பட்டு நுழைவுப் பகுதியில் இருந்த மின் இணைப்புப் பெட்டி, வயா்கள் எரிந்து சேதமாகின.
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருச்செந்தூா் தீயணைப்புத் துறையினா் வந்து தீயை அணைத்தனா். சம்பவம் அறிந்து, கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி, பணியாளா் ஜெகன், உதவி பாதுகாப்பு அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், போலீஸாா் வந்தனா்.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

