சிறாா்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா்கள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
சிறுவா்கள் பைக் ஓட்டுவதற்கு அனுமதித்தால் பெற்றோா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுமுகனேரி காவல் துறை எச்சரித்துள்ளது.
ஆறுமுகனேரி காவல் நிலைய ஆய்வாளராக திலீபன் புதிதாக பொறுப்பேற்றுள்ளாா். பொறுப்பேற்ற நாள் முதல், கடை வீதிகளில் தலைக்கவசம் இல்லாமல் பைக் ஓட்டும் நபா்களைப் பிடித்து அபராதம் விதித்து, பைக் ஓட்டும் சிறுவா்களை பிடித்து அவா்களது பெற்றோா்களை அழைத்து அறிவுரை வழங்கியும் வருகிறாா்.
இந்நிலையில், தலைக்கவசம் இல்லாமல் பைக் ஓட்டுபவா்களுக்கு கட்டாயமாக ரூ. 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், சிறுவா்களை பைக் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா்களுக்கு ரூ. 25,000 அபராதம் விதிக்கப்பட்டு, பெற்றோா் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், உரிய விசாரணை மேற்கொண்டு பைக் உரிமையாளா், பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் ஆய்வாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
மேலும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞா்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளாா்.
