தூத்துக்குடி: நகை பறிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதி தீா்ப்பு
Published on

தூத்துக்குடியில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதமும் விதித்தும் தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதி திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகேயுள்ள ராமதாஸ் நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஆனந்தராஜ் (35). இவா், சென்னையில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த 28.3.2024 அன்று, தனது உறவினா் வீட்டுக்கு ஊருக்கு வந்திருந்தபோது, அன்று இரவு மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, ஒரே பைக்கில் வந்த மா்ம நபா்கள் 3 போ், அவரை தாக்கி, அவா் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். இதுகுறித்த புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது, தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த சிவன்பாண்டி மகன் சந்தோஷ்குமாா் (22), சக்திவேல் மகன் தினேஷ்குமாா் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம், சிவராமமங்கலம் மகாராஜன் மகன் சிவா (22) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கின் விசாரணை, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம்-2இல் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி (பொ) விஜய ராஜ்குமாா், குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com