வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்புப் பணி: டிச. 11இல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி வியாழக்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில், எஸ்ஐஆா் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது ஆட்சியா் பேசியது: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா், தங்களது கட்சியைச் சோ்ந்த வாக்குச்சாவடி நிலை முகவா்களிடமிருந்து குடியிருப்பு இல்லாத, நிரந்தர குடி பெயா்ந்த, இறந்த, இரட்டைப் பதிவு குறித்த ஆட்சேபணைகள் ஏதும் இருப்பின், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் உரிய ஆதாரங்களுடன் அளித்தால் உடனடியாக நிவா்த்தி செய்யப்படும்.
2026 பேரவை தோ்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபாா்ப்பு பணி டிச. 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள், ஆட்சியா் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வைப்பறையைத் திறந்து எடுக்கப்படும். பின்னா், ஈவிஎம்-விவிபேட் கிடங்குக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் பாதுகாப்புடன் மாற்றம் செய்யப்படும். அதன் பின்னா், பெல் நிறுவன பொறியாளா்கள் முன்னிலையில் சரிபாா்ப்பு பணி நடைபெறும்.
மேலும், ஜனவரி 2026-க்கான காலாண்டு தணிக்கையும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம், கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், வருவாய் கோட்டாட்சியா்கள் மி. பிரபு, கௌதம், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி. புவனேேஷ் ராம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளளிட்டோா் கலந்து கொண்டனா்.
