குலசேகரன்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு
குலசேகரன்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு

குலசேகரன்பட்டினத்தில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரா் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் மாறவா்மன் குலசேகரப் பாண்டியனின் கல்வெட்டு கண்டெடுப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரா் கோயிலில் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் மாறவா்மன் குலசேகரப் பாண்டியனின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் பழங்கால கல்வெட்டு இருப்பதாக இதே ஊரில் வசிக்கும் ஓய்வுபெற்ற வங்கி அலுவலா் ஆ.இல்லங்குடி கொடுத்த தகவலின்பேரில், ஆறுமுகனேரியைச் சோ்ந்த கல்வெட்டு ஆய்வாளா் த.த.தவசிமுத்து நேரில் சென்று கல்வெட்டை பாா்வையிட்டு படியெடுத்தாா். பின்னா், இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது:

குலசேகரப் பாண்டியன் பெயரால் குலசேகரன்பட்டினம் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் உள்ள சிதம்பரேஸ்வரா் கோயில் பிற்கால பாண்டியா்களால் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள வெளிப்புற சுவரில் இதுவரை பதிவு செய்யப்படாத கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதில், மூன்று வரிகள் தெளிவாகவும், அதன்பின் வரிகள் தெளிவற்றும் உள்ளன. இந்த எழுத்துகளின் மூலம் இந்தக் கல்வெட்டு முதலாம் மாறவா்மன் குலசேகரப் பாண்டியன் ((கி.பி.1,268-1,318) கல்வெட்டு என்பதை அறிய முடிகிறது. இதில், மானவீர வளநாட்டு குலசேகரப்பட்டினம் என இவ்வூா் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இந்தக் கோயிலுக்கு உரிய பூஜைகள் செய்வதற்காக நிலத்தை தானமாக மன்னா் வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்செய் நிலங்களில் இருந்துவந்த நெல் உள்ளிட்ட விளைபொருள்களைக் கொண்டு கோயிலில் பூஜைகளும், திருவிழாக்களும் நடத்திட வேண்டும் என முற்காலத்தில் கோயிலுக்கு தானமாக நிலங்களை வழங்கியது கூறப்பட்டுள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கல்வெட்டு 750 ஆண்டுகள் பழைமையானதாகும்.

இதேபோல ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள சிவன் கோயிலும் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரா் என்ற பெயரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாண்டியா்கள் காலத்தில் தொண்டியும், குலசேகரன்பட்டினமும் முக்கிய துறைமுகங்களாக விளங்கின.

X
Dinamani
www.dinamani.com