கோவில்பட்டி என்.இ. கல்லூரிக்கு ஆராய்ச்சிக்கான மானியம்: முதல்வா் வழங்கினாா்

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவன (டிட்கோ) பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்காவின் ஆராய்ச்சி மானியத் திட்டம் 2025-இன் கீழ் ரூ. 27 லட்சம் ஆராய்ச்சி நிதியுதவி பெற்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாதனை படைத்தது.
Published on

தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவன (டிட்கோ) பல்கலைக்கழக ஆராய்ச்சி பூங்காவின் ஆராய்ச்சி மானியத் திட்டம் 2025-இன் கீழ் ரூ. 27 லட்சம் ஆராய்ச்சி நிதியுதவி பெற்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாதனை படைத்தது.

‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ராணுவம், சாலைப் பாதுகாப்பு கருவி நெறிமுறை வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்’ என்ற தலைப்பில் நேஷனல் பொறியியல் கல்லூரியும், பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு கல்லூரி வளாகத்தில் செயல்படும் மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ரூ. 65 லட்சம் மதிப்பில் ஆய்வு திட்டத்தை சமா்ப்பித்திருந்தன.

இந்தத் திட்டத்துக்காக டிட்கோ சாா்பில் ரூ. 27 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. மேலும் மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 38 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை வழங்குகிறது. திட்ட உத்தரவு நகல், முதல் கட்ட மானியம் ரூ. 13 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் டிச. 7ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளா்கள் மாநாடு-2025 நிகழ்ச்சியின்போது ஆராய்ச்சி குழுவினரிடம் வழங்கினாா். அப்போது தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா உள்ளிட்ட அமைச்சா்கள், உயா் அதிகாரிகள், தொழில்துறை வல்லுநா்கள் உடனிருந்தனா்

நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறை மூத்த உதவி பேராசிரியா் பி.கணபதி ராம், உதவி பேராசிரியை எஸ்.லாவண்யா ஆகியோா் இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளா்களாக செயல்படுகின்றனா். மிஸ்ட்ரல் சொல்யூஷன்ஸ் நிறுவன உதவி துணைத் தலைவா், பிராந்தியத் தலைவா் என்.ராஜா சுப்பிரமணியன் தொழில் பங்குதாரராக இத்திட்டத்தை வழிநடத்துகிறாா்.

கல்லூரி தாளாளா் கே ஆா் அருணாச்சலம், இயக்குநா் சண்முகவேல், முதல்வா் காளிதாச முருகவேல், மின்னணு மற்றும் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் ஆகியோா் மானியம் பெற்ற ஆராய்ச்சி குழுவினரை பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com