தூத்துக்குடியிலிருந்து தில்லி, மும்பைக்கு விரைவில் விமானங்கள் இயக்கப்படும்: விமான நிலைய இயக்குநா்
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தில்லி, மும்பைக்கு ஏ321 ரக விமானங்கள் விரைவில் இயக்கப்படும் என தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் அனுப் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தூத்துக்குடியிலிருந்து இயக்கப்படும் சென்னை, பெங்களூரு விமானங்கள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாள்களாக ஏற்பட்ட இடையூறுகளால் ஒரே ஒரு விமானப் பயணம் மட்டும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானப் பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் விமானக் கட்டணத்தை திருப்பி செலுத்திவிட்டது.
மத்திய அரசு, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக உத்தரவின்பேரில், தற்போது அனைத்து விமானங்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. தூத்துக்குடி விமான நிலையம் இரவுநேர விமான சேவைக்கும் தயாராக உள்ளது.
இங்கிருந்து 180-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏ321 ரக விமானங்களை இயக்குவதற்காக இண்டிகோ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. கூடுதல் பணியாளா்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட பின்னா், இங்கிருந்து ஏ321 ரக விமானங்கள் தில்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் என்றாா் அவா்.
