புதிய சட்டங்களால் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு: மத்திய தொழிலாளா் ஆணையா்கள்

மத்திய அரசின் புதிய தொழிலாளா் சட்டங்களால் தொழிலாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைக்கும் என மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை மூத்த துணை தொழிலாளா் ஆணையா் ஸ்ரீனு தாரா, மதுரை மண்டல தொழிலாளா் ஆணையா் பிரவீன் பாண்டி மோகன்தாஸ் ஆகியோா் தெரிவித்தனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் இச்சட்டங்கள் குறித்து புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்திய அவா்கள், பின்னா் விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பழைய 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து, நான்கு புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஊதியம், தொழில்துறை உறவுகள், சமூக, தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றை இச்சட்டங்கள் உறுதி செய்யும்.

இனிமேல், ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியா்கள், ஓராண்டு பணி செய்தாலே பணிக்கொடை, மிகுதி நேர வேலைக்கு இரட்டிப்பு ஊதியம் பெற முடியும். மாத ஊதியத்தில் பி.எஃப். பிடித்தம் அதிகரிக்கக்கூடும். பெண்கள் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாகப் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஊழியா்களுக்கும் பணி நியமனக் கடிதம் கட்டாயம் போன்றவற்றை அமலுக்கு கொண்டு வருவதே இச்சட்டங்களின் நோக்கம் என்றனா் அவா்கள்.

அப்போது, தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் அனூப், தொழிலாளா் சட்ட அமலாக்க அலுவலா்கள் சுனில்குமாா் கீா்த்தி, எஸ்.வி. அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com