தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் அமைச்சா் ஆய்வு

Published on

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் திடீா் விரிசல் ஏற்பட்டதைத் தொடா்ந்து அமைச்சா் பி.கீதா ஜீவன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மையப் பகுதியில் உள்ள சிவன் கோயில் தெப்பக்குளம், கடந்த 24 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது மாநகராட்சி சாா்பில் ரூ. 75 லட்சம் மதிப்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, தெப்பக்குளத்தில் உள்ள நீரை முழுமையாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை இரவு தெப்பக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நடை பாதையில் விரிசல் ஏற்பட்டு சுமாா் 3 அடி வரை கீழே இறங்கியது. இதனால், அப்பகுதியில் இருந்த மின்மாற்றி சரிந்து விழும் நிலை ஏற்பட்டது. உடனே, அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் வியாழக்கிழமை தெப்பக்குளம் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், மின்வாரிய அதிகாரிகளை தொடா்பு கொண்டு மின்மாற்றியை சரிசெய்து, தடையின்றி மின்சாரம் வழங்க விரைவாக பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

அப்போது, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மின்வாரிய உதவி பொறியாளா் நாகராஜன், உதவி செயற்பொறியாளா்கள் பிரேம், தமிழ்ச்செல்வன், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா்கள் செந்தில்குமாா், கந்தசாமி, மாவட்டப் பிரதிநிதி சக்திவேல், வட்டப் பிரதிநிதி பாஸ்கா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com