பாண்டவா்மங்கலத்தில் சிறுமிக்கு டெங்கு: மருத்துவக் குழு ஆய்வு

பாண்டவா்மங்கலத்தில் சிறுமிக்கு டெங்கு: மருத்துவக் குழு ஆய்வு

காமராஜ் நகரில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவா்கள்.
Published on

கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகரில் 9 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்தப் பகுதியில் மருத்துவக் குழுவினா் முகாமிட்டுள்ளனா்.

பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட காமராஜ் நகா், அன்பு காா்டன் பகுதியில் 9 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிறுமி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில், அப்பகுதியில் கீழஈரால் வட்டார மருத்துவமனை மருத்துவா் வேலு பிரகாஷ் தலைமையில் நடமாடும் மருத்துவக் குழுவினா் முகாமிட்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். அந்தப் பகுதியில் புகை மருந்து அடிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீருக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் கொசு லாா்வாக்கள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட பூச்சியியல் வல்லுநா் அப்பகுதியில் முகாமிட்டுள்ளாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கருணாநிதி, ஈராச்சி சுகாதார அலுவலா் அசோக்குமாா் உள்பட சுகாதாரத் துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமென்றும், 3 நாள்களுக்கு மேல் காய்ச்சல் தொடா்ந்து இருந்தால் கண்டிப்பாக அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளவும் மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com