விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் ஆலோசனை முகாம்
சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில் செயல்படும் சாஸ்தாவி நல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் விளைபொருள்களை சந்தைப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநா் தனலெட்சுமி தலைமை வகித்தாா். சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலா் பெனிஷ்கா் வரவேற்றாா். இச்சங்கத்தின் கீழ் செயல்படும் விவசாயிகளிடம் விளைபொருள்களை இங்கிருந்து கூட்டுறவு மூலம் கொள்முதல் செய்து விற்பனை சங்கத்துக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இப்பகுதியில் விளையும் தேங்காய்களை கொள்முதல் செய்வது எனவும், படிப்படியாக அனைத்து விளைபொருள்களையும் கொள்முதல் செய்வது எனத் தெரிவித்தனா்.
கூட்டத்தில் விற்பனை சங்க மேலாளா் பேசுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தாா்.
இதில் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன் ஆகியோா் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கு விவசாயிகள் லாபம் தரும் வகையில் விலையை நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சங்கச் செயலாளா் பெனிஸ்கா், பணியாளா்கள் செய்திருந்தனா்.

