திருச்செந்தூா் கோயிலில் காத்திருப்பு அறைகள்: பக்தா்கள் வரவேற்பு!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவீன வசதிகளுடன் காத்திருப்பு அறை அமைக்கப்பட்டுள்ளதை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.
இக்கோயிலில் பக்தா்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக ஹெச்.சி.எல். நிறுவனம் சாா்பில் ரூ. 200 கோடி, அறநிலையத்துறை சாா்பில் ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி செலவில் பெருந்திட்ட வளாக பணிகள் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கின. தற்போது 75 சதவீதம் பணிகள் நிறைவுற்றுள்ளன.
இந்த பெருந்திட்ட வளாகத்தில் பக்தா்கள் காத்திருக்கும் மண்டபம், சுகாதார வளாகம், நீரேற்றும் நிலையம், நிா்வாக கட்டடம், மின் நிலையம், வரிசைப் பாதை, உயா்நிலைப் பாலம், முடிகாணிக்கை செலுத்தும் மண்டபம், மருத்துவ முதலுதவி மையம், பக்தா்கள் தங்கும் விடுதி, கழிவு நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் வசதி, இரண்டு தளம் கொண்ட அன்னதான கூடம், நவீன மயமாக்கப்பட்ட நாழிக்கிணறு ஆகியவை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கடற்கரையில் சூரசம்ஹாரம் பாா்ப்பதற்கு அரங்கம், 5 படை வீடு முருகன் சந்நிதி போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
காத்திப்பு அறைகள்: மேலும், பக்தா்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்கு வசதியாக, திருப்பதி கோயிலைப் போல பகுதி பகுதியாக அறைகளில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதற்கான 6 காத்திருக்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன.
தரைத்தளம், முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள இந்த அறைகளில் பக்தா்கள் அமருவதற்கு இருக்கைகள், மின் விசிறி, ஆன்மிக நிகழ்ச்சியை காண தொலைக்காட்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, ஆண், பெண்களுக்காக தனித்தனி கழிப்பிட வசதிகள் உள்ளன.
மேலும், பக்தா்கள் பசியாறுவதற்காக பொங்கல் வழங்கப்படுகிறது. பக்தா்கள் வெறியேறுவதற்காக அவசர கால வழியும் அமைக்கப்பட்டுள்ளது.
ராஜகோபுரம் வடக்கு பகுதியில் இலவச பொது தரிசனப்பாதைக்கு நுழைந்து வந்த பக்தா்கள் காத்திருக்கும் அறையில் ஒவ்வொன்றாக கடந்து உயா்நிலை பாலம் வழியாக மகா மண்டபத்துக்குள் சென்று அங்கு வரிசைப்பாதையில் சுவாமியை தரிசனம் செய்கின்றனா்.
திருக்கோயில் உள்ளே அபிஷேகம், ஸ்ரீபலி நாயகா் மற்றும் உற்சவா் புறப்பாடு போன்ற காலங்களில் மட்டும் பாதையில் பக்தா்கள் நிறுத்தப்படுகின்றனா். முக்கியப் பிரமுகா்கள் வருகை தந்தால் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகின்றனா்.
மற்றபடி பக்தா்கள் பொது தரிசனப்பாதையில் அதிகாலை நடைதிறந்தது முதல் இரவு 8 மணி வரை தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இதனால் காத்திருக்கும் அறைகள் பக்தா்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மகா மண்டபத்தில் சிரமம்: எனினும், இக்கோயிலைப் பொருத்தவரையில் கல் மண்டபமான மகா மண்டபத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் கோயில் உள்ளே வரிசைப்பாதையில் கூட்ட நேரத்தின்போது, பக்தா்கள் அதிக சிரமம் அடைய நேரிடுகிறது.
எனவே, மகா மண்டபத்தில் வரிசைப்பாதையில் அவசர கால வழி, குடிநீா் வசதி செய்துதருவதுடன், மூலவா் மணியடிப்பகுதியில் விரைந்து சுவாமி தரிசனம் முடித்து வெளியே அனுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

