பள்ளி மாணவிகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் 9 போ் காயம்
தூத்துக்குடி வட்ட கோயில் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநா், பள்ளி மாணவிகள் 8 போ் காயமடைந்தனா்.
தூத்துக்குடி வட்டக் கோயில் அருகே சேதுபாதை சாலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதைச் சாக்கடை குழாய் பதிக்க பள்ளம் தோண்டியதில் சாலை குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது. அண்மையில் பெய்த மழையில் சாலை முற்றிலும் பழுதடைந்து மேடுபள்ளமாகக் காணப்படுகிறது.
இந்த நிலையில், மாப்பிள்ளையூரணி ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வீரபத்திரன் தனது ஆட்டோவில் இதே பகுதி மாணவிகள் 8 பேரை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். சேதுபாதை சாலையில் சுந்தரவேல்புரம் அருகே சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்தது.
இதைக் கண்டதும் அக்கம்பக்கத்தினா் ஆட்டோவில் இருந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்தில் ஓட்டுநரும், 3 மாணவிகளும் பலத்த காயமடைந்தனா்; 5 மாணவிகள் லேசான காயத்துடன் தப்பித்தனா். தகவலறிந்த ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி.சண்முகையா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவிகளை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தாா். வடபாகம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

