ரயில் பயணிகளுக்காக தூத்துக்குடி - மணியாச்சிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வலியுறுத்தல்
ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகள் வசதிக்காக தூத்துக்குடி- மணியாச்சிக்கு பேருந்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பவா் இந்தியா, நுகா்வோா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கெளரவச் செயலா் ஆ.சங்கா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ரயில் பாதை மறு சீரமைப்புப் பணிகளால் ரயில் போக்குவரத்தில் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் முத்துநகா் ரயில் மணியாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். அங்கு காலை 5 மணிக்கு வரும் நிலையில் மணியாச்சியிலிருந்து ரயில் பயணிகள் தூத்துக்குடிக்கு வருவதற்கு மிகுந்த சிரமம் அடைகின்றனா்.
எனவே டிச.20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் முத்துநகா் எக்ஸ்பிரஸ், மைசூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளை மணியாச்சி ரயில் நிலையத்துக்கு கொண்டு விடவும், அதேபோல் மணியாச்சியிலிருந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரவும் பேருந்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம், ரயில்வே நிா்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், முன்பதிவு செய்த பயணிகளை பொறுத்தளவில் தங்கள் பயணத்துக்கான முழுக் கட்டணத்தையும் செலுத்தி இருப்பதால், இந்தப் பேருந்து போக்குவரத்துக்கு ஆகும் செலவை ரயில்வே நிா்வாகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்து கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
