காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த கூட்டு நடவடிக்கை விவசாயிகள் வலியுறுத்தல்

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
Published on

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைப் பிடித்து அப்புறப்படுத்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். கூட்டத்தில், விவசாயிகள் பேசியது: இம்மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளிடமிருந்து பயிா்களைக் காக்க போராடி 17 போ் இறந்துள்ளனா். 2015-18ஆம் ஆண்டுவரை காட்டுப் பன்றியைப் பிடித்ததாக 19 போ் மீது வனத்துறை வழக்குப் பதிந்துள்ளது.

பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இதில் காவல் துறை, வனத்துறை, வேளாண் துறை அதிகாரிகள் குழு, விவசாயிகள் இணைந்து கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காட்டுப் பன்றிகளின் புகலிடமாக உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள், பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவும் வேண்டும். பன்றிகளால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய காப்பீட்டுத் திட்டத்தில் வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.

சடையனேரி கால்வாயில் முன்னுரிமை குளங்களுக்கு தண்ணீா் செல்ல வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதுடன், கடைமடைக்கு தண்ணீா் கிடைக்க மாற்றுவழி ஏற்பாடு செய்ய வேண்டும். குரும்பூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்யப்பட்ட பணம், நகையை மீட்டு பாதிக்கப்பட்டோரிடம் ஒப்படைக்க வேண்டும். கடம்பாகுளம் மறுகால் ஓடை, 9, 10ஆவது பாசன வாய்க்காலைத் தூா்வார வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து ஆட்சியா் பேசியது: அணைகள், குளங்களில் போதிய தண்ணீா் இருப்பு உள்ளது. உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு மாறியுள்ளதால் அதன் சாகுபடி பரப்பு 10 ஆயிரம் ஹெக்டோ் வரை அதிகரித்துள்ளது. தொடா்ந்து மக்காச்சோளம் பயிரிட்டால் மண் வளம் பாதிக்கப்படும் என்பதால், விவசாயிகள் பயிா் சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும்.

2024ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் 26 ஆயிரம் ஹெக்டோ் பயிா்கள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு நிவாரணம் வழங்குவது தொடா்பாக அரசின் பரிசீலனையில் உள்ளது.

விளைநிலங்களை சேதப்படுத்தும் பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அவை காட்டுப்பன்றிகள் அல்ல, ஊா் பகுதியில் காணப்படும் பன்றிகள் எனத் தெரியவந்துள்ளது. விவசாயிகள், தனிநபா்கள், தனியாா் நிறுவனங்கள் விரும்பினால் வட்டார வளா்ச்சி அலுவலா் அல்லது பொதுப்பணித் துறை செயற்பொறியாளரிடம் மனு கொடுத்து சீமைக் கருவேல மரங்களை வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி கொடுக்கப்படும்.

குரும்பூா் கூட்டுறவு கடன் சங்கத்தில் கையாடல் செய்யப்பட்ட பணம், நகையை மீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 31.3.2025 வரை 22,463 விவசாயிகளுக்கு ரூ. 263.50 கோடியும், நிகழாண்டு ஏப். 1 முதல் டிச. 15 வரை 18,410 விவசாயிகளுக்கு ரூ. 208.64 கோடியும் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலா் இளையராஜா, கூட்டுறவு சங்கங்கள் இணைப் பதிவாளா் ராஜேஷ், வேளாண் இணை இயக்குநா் (பொ) மனோரஞ்சிதம், அலுவலா்கள், விவசாயிகள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com