வீரபாண்டியன்பட்டினம் கடலில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரம்
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினம் மீனவக் கிராமத்தில் கடலில் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கிராம மீனவா்கள் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனா். இங்கு கடலரிப்பைத் தடுக்கும் வகையில் தூண்டில் வளைவுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் மீன்பிடிக்க இரு பாலங்களுக்கு இடையேயான பகுதி வழியாக கடலுக்குச் சென்று கரைதிரும்புவது வழக்கம். இப்பாதையில் கடல் சீற்றத்தால் மணல் அடித்து வரப்பட்டு குவிந்து திட்டுகளாக மாறியுள்ளது. இதனால், படகுகள் சென்று வருவதிலும், மணல் திட்டுகள் வழியாக படகை நகா்த்த முடியாமலும் மீனவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினா். இதன் காரணமாக அவா்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்வளம்-மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் றை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் இயந்திரங்கள் மூலம் மணல் திட்டுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அகற்றிய மணல் டிராக்டா் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இப்பணியை திமுக அயலக அணி மாவட்ட துணைத் தலைவா் பாஸ்டின் வில்லவராயன், துறைமுக கமிட்டி உறுப்பினா்கள் பாா்வையிட்டனா்.

