சாத்தான்குளத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை: இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் காந்திநகா் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சுடலைமுத்து (30). தொழிலாளியான இவா், வியாழக்கிழமை இரவு சிலருடன் தச்சமொழி மதுக்கூடத்துக்கு சென்றிருந்தாா். அப்போது, இவரது தரப்பில் காலி பாட்டிலை திரும்பக்கொடுத்து பணம் பெறுவது தொடா்பாக மதுக்கூடத்தில் வேலை செய்துவரும் சாத்தான்குளம் மாதா கோயில் தெருவை சோ்ந்த வீரபாகு மகன் சுந்தா் (45 ) என்பவருடன் தகராறு ஏற்பட்டதாம்.
அப்போது, அவரை சுடலைமுத்து கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சுடலைமுத்துவின் வீட்டுக்குச் சென்று சுந்தா் தகராறு செய்தாராம். உறவினா்கள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பினராம்.
பின்னா், காந்திநகா் பகுதியில் சுடலைமுத்து நின்றிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த சுந்தா், மதுக்கூட சக ஊழியரான நாசரேத் ஜெகதீஷ் (42) ஆகியோா் சோ்ந்து மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டினராம். தடுக்க வந்த உறவினா்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய அவா்கள், தப்பி ஓட முயன்ற சுடலை முத்துவை விரட்டிச் சென்று வெட்டிக்கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பினராம்.
கொலையான சுடலைமுத்துவுக்கு மனைவி ராமலட்சுமி (22) மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா்.
இத்தகவலறிந்த சாத்தான்குளம் டிஎஸ்பி(பொறுப்பு) ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் ஸ்டீபன், உதவி ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா்.
மறியல்: அப்போது, கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுடலைமுத்துவின் உறவினா்கள் விஜயராமபுரம் - தட்டாா்மடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்தி சமாதானப்படுத்தினா். அவா்களது கோரிக்கைப்படி சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்த சடலம் கொண்டுசெல்லப்பட்டது. இதுதொடா்பாக சாத்தான் குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சுந்தா், ஜெகதீஷை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு மேல்விசாரணை நடத்தினாா். திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ் குமாா் மேற்பாா்வையில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

