சாா்பு ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
தூத்துக்குடியில் காவல் சாா்பு ஆய்வாளா் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
2025-ஆம் ஆண்டிற்கான நேரடி காவல் சாா்பு ஆய்வாளா்கள் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) காலை 10 முதல் 12.30 மணி வரை முதன்மைத் தோ்வும், பிற்பகல் 3.30 முதல் 5.10 மணி வரை தமிழ் மொழி தகுதித் தோ்வும் நடைபெறவுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. கல்லூரி, கிரேஸ் பொறியியல் கல்லூரி ஆகிய மையங்களில் ஆண் விண்ணப்பதாரா்களும், காமராஜ் கல்லூரி மையத்தில் பெண் விண்ணப்பதாா்களும் என 5,146 போ் தோ்வு எழுத உள்ளனா்.
தோ்வுக்கூட அனுமதிச் சீட்டுடன், விண்ணப்பதாரா் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளான ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும். கைப்பேசி, கால்குலேட்டா், மின்னனு கைக்கடிகாரம், ப்ளுடூத் போன்ற மின்னனு கருவிகள் தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.
முதன்மைத் தோ்வுக்கு காலை 8 முதல் 9.30 மணி வரையும், தமிழ் தகுதித் தோ்வுக்கு பிற்பகல் 2 முதல் 3 மணி வரை மட்டுமே தோ்வு மையத்துக்குள் செல்ல விண்ணப்பதாரா்கள் அனுமதிக்கப்படுவா். மேலும், காலையில் தோ்வு மையத்துக்கு வந்த விண்ணப்பதாா்கள், தமிழ் தகுதித் தோ்வு முடியும் வரை தோ்வு மையத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது.
தோ்வா்கள் உணவு அருந்துவதற்காக தோ்வு மையங்களில் உணவு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு தோ்வா்கள் நேரடியாக பணம் கொடுத்து உணவு வாங்கிக் கொள்ளலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
