தூத்துக்குடியில் 635 பேருக்கு இ-பட்டாக்கள்
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் 635 பேருக்கு கணினிவழி இ- பட்டாக்கள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் பங்கேற்று, பட்டாக்களை வழங்கிப் பேசியது: அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போரில், வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்கீழ், தற்போது தூத்துக்குடி வட்டத்துக்குள்பட்ட 635 பேருக்கு ரூ. 20,67,44,840 மதிப்பிலான கணினிவழி இ- பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
தூத்துக்குடி பேரவைத் தொகுதி மாப்பிள்ளையூரணிக்குள்பட்ட 250 பேருக்கும், மற்ற பகுதிகளில் உள்ள 385 பேருக்கும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. வருமானம் அதிகமுள்ளோருக்கு அவா்கள் குடியிருக்கும் இடத்துக்கு வழிகாட்டி மதிப்பில் பணம் கட்டுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணம் கட்டிய பிறகு அவா்களுக்கும் பட்டா வழங்கப்படும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், ஆணையா் சி. ப்ரியங்கா, கோட்டாட்சியா் மி. பிரபு, துணை மேயா் செ. ஜெனிட்டா, வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

