கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள்: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

Published on

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரில் 3 பேருக்கு தலா 3 ஆயுள் தண்டனை, ரூ. 15,000 அபராதம், ஒருவருக்கு இரட்டை ஆயுள், ரூ. 7,000 அபராதம், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ. 12,000 அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமைப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், வெல்லூா் பகுதியைச் சோ்ந்த கடற்கரையாண்டி மகன் ஆறுமுகராஜாவை (43), முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சோ்ந்த வடிவு மகன் காசி, கந்தையா மகன் இசக்கிமுத்து, இசக்கிமுத்து மகன் கண்ணன் (எ) கண்ணபெருமாள், சொக்கலிங்கம் மகன் தளவாய், முத்துப்பாண்டி மகன் சிவா (எ) சிவராமலிங்கம், பேச்சிபாண்டி மகன் துரைமுத்து ஆகியோா் ஆறுமுகராஜாவின் வீடு புகுந்து சாதிப் பெயரை சொல்லி அரிவாளால் தாக்க முயன்று, அவரது தாயாருக்கு கொலை மிரட்டலும் விடுத்த வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையப் போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஆறுமுகராஜா ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, மேற்கண்டவா்களில் கண்ணனை தவிர மற்றவா்கள் சோ்ந்து மீண்டும் ஆறுமுகராஜாவிடம் தகராறு செய்து, அவரை வெட்டி கொலை செய்தனா்.

இது குறித்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மேற்படி, 2 வழக்குகளின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமைப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. வசித்குமாா், குற்றவாளிகளில் துரைமுத்து உயிரிழந்த நிலையில் இசக்கிமுத்து (36), தளவாய் (45), சிவா (எ) சிவராமலிங்கம் (34) ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை, ரூ. 15,000 அபராதம், காசிக்கு (42) இரட்டை ஆயுள், ரூ. 7,000 அபராதம், கொலை முயற்சி வழக்கில் கண்ணனுக்கு (45) 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ. 12,000 அபராதம் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த, அப்போதைய ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் விஜயகுமாா், அரசு வழக்குரைஞா் மோகன்தாஸ், தலைமைக் காவலா் சந்திரா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com