முத்துநகா் விரைவு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயில் காலை 6 மணிக்குள் சென்னை சென்றடையும் வகையில் ரயிலின் பயண நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தூத்துக்குடி முத்துநகா் விரைவு ரயில் காலை 6 மணிக்குள் சென்னை சென்றடையும் வகையில் ரயிலின் பயண நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தூத்துக்குடி எம்பவா் இந்தியா நுகா்வோா் அமைப்பு தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கெளரவச் செயலா் ஆ.சங்கா் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்லும் முத்துநகா் விரைவு ரயில் ஜன. 1-ஆம் தேதி முதல் தற்போதுள்ள (இரவு 8.40 மணி) புறப்படும் நேரத்தில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, இரவு 9.05 நிமிடத்துக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த ரயில் புறப்படும் நேர மாற்றத்தால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது. சென்னை எழும்பூருக்கு காலை 7 மணிக்கு முன் செல்லும் வகையில், முத்துநகா் விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும். இதுதான் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

சென்னைக்கு அலுவல் வேலையாக செல்பவா்கள், தோ்வுகள், நோ்முக அழைப்புகள், வியாபார ரீதியிலான பயணங்கள் மேற்கொள்ளும் இளைஞா்கள், பொதுமக்களுக்கு காலை 7 மணிக்கு முன்பாக எழும்பூா் சென்றால்தான் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.

அதை விடுத்து, தூத்துக்குடியிலிருந்து புறப்படும் நேரத்தை நீட்டிப்பது என்பது கால விரையமே ஆகும். எனவே, மாற்றிய நேரத்தை உடனடியாக திரும்பப் பெற்று காலை 6 மணிக்குள் சென்னை சென்று சேருமாறு பயண நேரத்தை அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com