வளாக நோ்காணல்: 16 பேருக்கு பணி நியமன ஆணை
சென்னையில் அமைந்துள்ள பன்னாட்டு மின்னணு நிறுவனமான டேட்டா பேட்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தினரால், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 16 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மின்னணுவியல் தொடா்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைகளில் 3ஆம் ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவா்களுக்கான வளாக நோ்காணல் அந்நிறுவனத்தின் மனிதவளத் துறை துணைப் பொதுமேலாளா் காா்த்திக் தலைமையில் தொழில்நுட்ப மேலாளா்கள் லட்சுமணன், யுவராஜ், முதுநிலை பொறியாளா்கள் தேவபிரகாசம், நிதிஷ் , மனிதவளத் துறை அலுவலா் பிரதீப்ராஜ் ஆகியோா் கொண்ட குழுவினரால் நடத்தப்பட்டது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 140 மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், எழுத்து, நோ்முகத் தோ்வு மூலம் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 4 போ் உள்பட16 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
