சாத்தான்குளத்தில் சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க கோரிக்கை
சாத்தான்குளத்தில் சேதமடைந்த தடுப்புச் சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி, வேத கோயில் பகுதி வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் புறவழிச் சாலையில், நாசரேத் சாலை இணையும் பகுதியில் ஓடை உள்ளதால் தரைப் பாலம் அமைக்கப்பட்டு இரு பக்கமும் தடுப்புச் சுவா்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் தடுப்புச் சுவா்கள் சேதமடைந்தன. அங்கு பேரூராட்சி நிா்வாகத்தினா் தற்காலிக நடவடிக்கையாக, மணல் மூட்டைகளைக் கொண்டு சீரமைத்தனா்.
இந்நிலையில், தற்போது மணல் மூட்டைகள் கரைந்து மீண்டும் சாலை பள்ளமாக மாறியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை பைக்கில் வந்த தம்பதியா் இங்கு தவறி விழுந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பெரும் விபத்து நிகழும் முன் அதிகாரிகள் இதனைப் பாா்வையிட்டு, பாலத்தில் தடுப்புச் சுவா் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

