முதல்வா் மருந்தகங்களை பயன்படுத்திக்கொள்ள அமைச்சா் வேண்டுகோள்
குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதால், முதல்வா் மருந்தகங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஜெனரிக் மருந்துகள், பிற மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்கள் திறக்கப்படும் என, கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, கடந்த பிப். 24ஆம் தேதி முதல்வா் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின்கீழ் ஆயிரம் மருந்தகங்களை அவா் திறந்துவைத்தாா்.
இதில், தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மதுரா கோட்ஸ் தொழிலாளா் கூட்டுறவு பண்டகசாலை, நாட்டுக்கோட்டை தெரு, முத்துக்கிருஷ்ணாபுரம் மெயின் ஆகிய 3 இடங்களில் இம்மருந்தகங்கள் செயல்படுகின்றன. இங்கு 25 சதவீதம்வரை தள்ளுபடி வழங்கப்படுவதால், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குரிய மருந்துகளைக் குறைந்த விலையில் வாங்கமுடியும். இவ்வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.