ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 3 மாணவா்கள் கைது

Published on

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளியில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய 3 மாணவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் காளான் வளா்ப்பு குறித்து பயிற்சி, கருத்தரங்கம் அக்.29ஆம் தேதி நடைபெற்றது. இப்பயிற்சியில் சவலாப்பேரி, வல்லநாடு ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். மதிய இடைவேளையின் போது இரு பள்ளி மாணவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம். இதை பாா்த்த ஆசிரியா்கள் அவா்களை சமாதானம் செய்தனராம்.

பின்னா், மாலையில் பயிற்சி முடிந்து இரு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களும் ஊருக்கு செல்வதற்கு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனராம். இதற்கிடையே, சவலாப்பேரி பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் பயிற்சியின் போது நடைபெற்ற பிரச்னை குறித்து கிராமத்தில் உள்ளவா்களிடம் தெரிவித்தனராம். இதையடுத்து, கிராமத்திலிருந்து மோட்டாா் சைக்கிளில் வந்தவா்கள், அங்கு இருந்த வல்லநாடு மாணவா்களை தாக்க முயன்றபோது அவா்கள் தப்பியோடிவிட்டனராம்.

இந்நிலையில், அக்.30ஆம் தேதி மதியம் மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ், எங்கள் கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் தாக்கப்பட்டதற்கு பள்ளி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சவலாப்பேரி பள்ளியில் 2 பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசினராம். இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விசாரணையில் புளியம்பட்டி அருகே சொக்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த குருநாதன் மகன் சுரேந்திரன்(19), சவலாப்பேரி பள்ளியில் 12ஆவது வகுப்பு படிக்கும் 16 வயது மாணவா், தூத்துக்குடி அரசு தொழிற்கல்வி நிலையத்தில் படிக்கும் 16 வயது மாணவா் ஆகிய 3 பேரும் சோ்ந்து பள்ளியில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com