கோவையில் பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: க.கிருஷ்ணசாமி
கோவில்பட்டி: கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய நபா்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 6 மாதங்களாக தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் நான் சுற்றுப்பயணம் சென்றுவருகிறேன். கிராமங்களில் குடிநீா், மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. எனவே, பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி, முதல் கட்டமாக எனது தலைமையில் வரும் நவ. 20 ஆம் தேதி திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி தனது தோழா் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவை விமான நிலையம் அருகே 19 வயது இளம்பெண் நான்குபோ் கொண்ட கும்பலால் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகளுக்கு காவல் துறை மீது அச்சம் இல்லை. இத்தகைய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சியில் மக்கள் திருப்தியாக இல்லை. 2026 தோ்தலுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு விடிவு காலத்தைத் தரும் ஆட்சி அமைய வேண்டும். 2026, ஜனவரி 7-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சியின் மாநாடு மதுரையில் நடைபெறும். இந்த மாநாட்டில் முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றாா் அவா்.
பேட்டியின்போது, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை, தூத்துக்குடி மாவட்டச் செயலா்கள் அதிகுமாா் (வடக்கு), வழக்குரைஞா் ரமேஷ் (மத்திய), ஜெகன் (கிழக்கு), சுதன் (தெற்கு) ஆகியோா் உடனிருந்தனா்.

