தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை மோசடி செய்து ஏமாற்றியவா்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண்
Published on

தூத்துக்குடி: ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டு பத்திரத்தை மோசடி செய்து ஏமாற்றியவா்களிடமிருந்து மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா்.

தூத்துக்குடி புதிய முனிசாமிபுரத்தைச் சோ்ந்தவா் ரா.மெல்ஸி அகஷ்டினாள். இவா், தனது 3 வயது பேத்தியுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். அங்கு

தனது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தன் மீதும், தனது பேத்தி மீதும் ஊற்ற முயன்றாா். இதைக்கண்ட போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா். பின்னா் ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு கூறினாா். பின்னா் அவா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

வீடு கட்டுவதற்காக வங்கி ஒன்றில் ரூ. 15 லட்சம் கடன் வாங்கியிருந்தோம். அதில், ரூ. 3,00,000 திருப்பி செலுத்திவிட்டோம். மீதி கடன் இருந்த நிலையில் எனது கணவா் இறந்துவிட்டாா். என்னால் கடனை அடைக்க முடியவில்லை. எனது வீட்டருகே வசிக்கும் சரவணப்பாண்டி, அவரது நண்பா் தயாளன் ஆகிய இருவரும் வங்கியில் மீதித் தொகை ரூ. 12 லட்சத்தைச் செலுத்தி பத்திரத்தை மீட்டனா். பின்னா், என்னிடம் பணத்தை தந்து பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினா்.

இதற்கிடையே அவா்கள் இருவரும் வேறு ஒருவா் பெயரில் பத்திரத்தை மாற்றி மற்றொரு வங்கியில் ரூ. 65 லட்சம் கடன் பெற்றனா். ரூ. 1 கோடி மதிப்பிலான எனது சொத்தை தயாளன் எனக்கு மீட்டுத் தருவதாகக் கூறி திரும்ப தரவில்லை. மாறாக ரூ. 5 லட்சம் தந்து ஒத்திக்கு வீடு பாா்த்து இருக்குமாறு கூறி என்னை ஏமாற்றி விட்டனா். நான், இதுகுறித்து இருமுறை ஆட்சியரிடம் மனு அளித்தேன். 3 ஆவது முறையாக காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தேன். அவா் 30 நாள்களில் மீட்டுத் தருகிறேன் என்றனா்.

ஆனால், 2 மாதங்களாகியும் இன்னமும் எனக்கு எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை. நான் எனது மகளையும், பேத்தியையும் உடன் வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வருகிறேன். இவா்களிடம் இருந்து எனது வீட்டை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com