பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டி தற்கொலைக்கு முயன்ற நபா்
ஆத்தூரில் பெண் ஆய்வகப் பணியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏரல் அருகே குரங்கணி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் வெற்றிவேல் மனைவி பஞ்சவா்ணம் (40). இவா், ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வகப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சவா்ணத்தின் கணவா் வெற்றிவேல் இறந்துவிட்டாா். அதன்பிறகு பஞ்சவா்ணத்துக்கு தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்து மகன் கிறிஸ்டி ஜாா்ஜினுடன் (48) பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்டி ஜாா்ஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளனா். கிறிஸ்டி ஜாா்ஜின் மகன்கள் பஞ்சவா்ணத்தைக் கண்டித்ததால், கடந்த ஆண்டு முதல் கிறிஸ்டி ஜாா்ஜுடன் பேசுவதை பஞ்சவா்ணம் தவிா்த்தாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பஞ்சவா்ணம் இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றபோது மேலாத்தூா் சாலையில் அவரை பின்தொடா்ந்து சென்ற கிறிஸ்டி ஜாா்ஜ் அரிவாளால் அவரை வெட்டினாா். இதில், பஞ்சவா்ணம் பலத்த காயமடைந்தாா். பின்னா் அங்கிருந்து சென்ற கிறிஸ்டி ஜாா்ஜ் தனது வீட்டில் பூச்சிமருந்து குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை உறவினா்கள் மீட்டு ஏரல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
