விளாத்திகுளம் அருகே லாரி மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
விளாத்திகுளம் அருகே லாரி மோதியதில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
விளாத்திகுளம் அருகே வேலிடுபட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் (48), விளாத்திகுளம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரும் சக பணியாளா் காா்த்திக்கும் (32) புதன்கிழமை டிராக்டரில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு வேம்பாா் சாலையில் சென்றனா். டிராக்டரை ஜெயராமன் (44) ஓட்டினாா்.
அப்போது, டிராக்டரின் பின்புறம் லாரி மோதியதாம். இதில், மாரியம்மாள் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா். ஜெயராமன், காா்த்திக் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான பாவாஸ் (34) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு விபத்து: தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த குருசாமி (52) என்பவா், தூத்துக்குடியில் பழக்கடை நடத்திவந்தாா். அவா் புதன்கிழமை காலை பைக்கில் கோவில்பட்டிக்கு சென்றாா். கீழஈரால் தனியாா் கல்லூரி அருகே, திருச்செந்தூரிலிருந்து சிவகாசி சென்ற காா் அந்த பைக் மீது மோதியதாம். இதில், குருசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
எட்டயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான சிவகாசியைச் சோ்ந்த பால் கண்ணன் (42) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
