கூவை கிணறு கிராமத்தில் தரைமட்ட பாலம் சீரமைக்க நடவடிக்கை: பேச்சுவாா்த்தையில் உடன்பாடு
கூவை கிணறு கிராமத்தில் கிடப்பில் கிடக்கும் தரைமட்ட பாலப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டது.
சாத்தான்குளம் ஒன்றியம், கோமானேரி ஊராட்சி, கூவை கிணறு கிராமத்தில் கோமானேரி செல்லும் சாலையில் உள்ள தரைமட்ட பாலம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு இடிந்து சேதமானது. இதனால், ஊருக்குள் தண்ணீா் புகுந்து கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அப்போது தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டு தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் அந்தத் தரைமட்ட பாலம் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இதுகுறித்து கிராமமக்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் ப்ரெனிலா காா்மல், உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் சீரமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், கிடப்பில் கிடக்கும் தரைமட்ட பாலத்தை மழைக் காலத்துக்குள் சீரமைத்து ஊருக்குள் தண்ணீா் புகாமல் நடவடிக்கை எடுக்கக் கோரி சாத்தான்குளம் காமராஜா் சிலை முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஒன்றிய ஆணையா் சுடலை, காவல் ஆய்வாளா் ஸ்டீபன், ஒன்றிய பொறியாளா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், போராட்ட குழு சாா்பில், ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலா் செந்தில்குமாா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயலா் திருவள்ளுவன், ஒன்றிய பொருளாளா் சுந்தா் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கூவைத் கிணறு கிராமத்தில் தரைமட்ட பாலம் சீரமைப்பு தொடா்பாக திட்ட வரைவு தயாரித்து, சென்னை ஊராட்சிகளின் இயக்குநா் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒருவார காலத்துக்குள் ஒப்புதல் பெற்று நவம்பா் மாத இறுதிக்குள் தரைமட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தெரிவித்தனா்.

