பக்ரைனில் பளு தூக்கி பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு வரவேற்பு

பக்ரைனில் பளு தூக்கி பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு வரவேற்பு

Published on

பக்ரைன் நாட்டில் நடைபெற்ற 3ஆவது இளையோா் ஆசிய விளையாட்டு போட்டியில் பளூ தூக்கும் பிரிவில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்ற வீரருக்கு கோவில்பட்டியில் வியாழக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சோ்ந்த மகாராஜன்(17 ) பளூ தூக்கும் போட்டியில் ‘ஸ்நாட்ச்’, ‘கிளீன் அண்டு ஜொ்க்’ ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஊருக்கு திரும்பிய அவருக்கு கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் பளு தூக்கும் வீரா்கள் சங்கத்தினா், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி நிா்வாகத்தினா், ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி அமைப்பினா் மற்றும் அவரது குடும்பத்தினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில், கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் ஜெகரத்தினராஜன், ஹாக்கி பயிற்சியாளா் முத்து குமாா், தூத்துக்குடி மாவட்ட பளு தூக்கும் சங்கத் தலைவா் சொா்ண முத்து, செயலா் சுடலைமுத்து, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி மாவட்ட பொருளாளா் காளிமுத்து பாண்டிய ராஜா மற்றும் இலுப்பையூரணி பிச்சையா உடற்பயிற்சி கழகத்தினா் கலந்துகொண்டனா்.

அதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் மகாராஜன் கூறியதாவது: நான் 12 வயதில் இருந்து பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தற்போது பாட்டிலயாவில் உள்ள பயிற்சி முகாமில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று தேசிய மற்றும் உலக அளவிலான போட்டியில் பங்கேற்று வருகிறேன். 3ஆவது இளையோா் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பயிற்சியாளா்கள் குடும்பத்தினா் முழு ஒத்துழைப்பு அளித்தனா். தமிழக முதல்வா் மு க ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவில்பட்டியில் விளையாட்டு விடுதியுடன் கூடிய பளு தூக்கும் பயிற்சி மையம் அமைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சோ்ப்பது எனது லட்சியம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com